திங்கள், 1 ஆகஸ்ட், 2011

சமர்ப்பனம்!!!


"தேவன்குறிச்சியூர் திருமறைத்தொண்டன்" அமரர்  இளையதம்பி ஆறுமுகம் ஜயா அவர்கள் எங்களை விட்டகன்று அதாவது ஜயாவை நாங்கள் இழந்து 46 நாட்களின் பிற்பாடு 31.08.2011 ஞாயிற்றுக்கிழமை  அன்று  ஜயாவை கெளரவிக்கு முகமாக ஜயாவின் குடும்பத்தினரின் ஆதரவுடன்,   "கற்பகத்தான்"  இணையத்தளம்,  "எங்க ஊர் இலக்கணாவத்தை"  முகநூல் குழுமம்,  "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா"  நிர்வாகத்தினர் இணைந்து இலக்கணாவத்தையில் வாழும் எமது உறவுகளின் ஆலோசனைகளையும் உள்வாங்கி ரொரண்டோ நகரில் அமைந்திருக்கும் பிரபல்யமான "சங்கமம்" மண்டபத்தில் கிட்டத்தட்ட 300 உறவுகளிற்கு மேல்  சூழ்ந்திருக்க  மிகவும் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியாகவும், புலம்பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினருக்கு  சிந்தனையை தூண்டும் விதமாகவும் ஜயாவின் நினைவஞ்சலி நிகழ்வு மிகவும் வெற்றியாக இடம்பெற்றுள்ளது.

ஜயாவின் நினைவஞ்சலி நிகழ்வு வெற்றியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனைத்து தரப்பினராலும் இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.   இவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற பிடிவாதத்தினாலும்,  இலக்கணாவத்தை மக்கள் பிற ஊர் மக்களிற்கு முன்னோடிகள் அதாவது எதிலும் உதாரனமாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு  கொண்டும்  இந்த நிகழ்வை தம்பி சுதா, மருமகன் குகரூபன், மருமகள் பவதாரனி ,  இன்னும் சிலர் தங்களது பெயரை வெளியிட விரும்பாதோர் உட்பட  அனைவரும் இணைந்து மிகவும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் தயார் படுத்தியிருந்தோம்.
இந்த நிகழ்வு கிட்டத்தட்ட மு.ப 11.45 மணியளவில் திரு மு.லிங்கம் அவர்கள் அன்னாரின் குடும்பத்தினர் சார்பில் சபையோருக்கு வணக்கம் கூறி, சபையோரை வரவேற்றுக்கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
நிகழ்வு Ontario மாநில இந்துசமயபேரவை திருக்கூட்டத்தின் பேரவையின் செயலாளர்  சிவ முத்துலிங்கம் ஜயா குழுவினரின் பஜனையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாவது நிகழ்வாக கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது, 

அனைத்து இலக்கணாவத்தை மக்களின் ஏகோபித்த குரல்களான  "கற்பகத்தான்", 'எங்க ஊர் இலக்கணாவத்தை",  "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா"  இணைந்து   "தேவன் குறிச்சியூர் திருமறைத்தொண்டன்"  என்ற கெளரவப் பட்டத்தை ஜயாவிற்கு வழங்கி கெளரவித்துள்ளது.

இந்த நிகழ்வின்போது மருமகன் குகரூபன், தம்பி சுதாவின் அனுசரனையுடன் வடிவமைக்கப்பட்ட கெளரவ சான்றிதழை திரு,திருமதி கற்பகஈஸ்வரன்(ஈஸ்வரன்) தம்பதியினர் வழங்க அன்னாரின் மூத்த மகனான திரு. குகதாஸன்(குகன்) தம்பதியினர் பெற்றுக்கொண்டனர்.  இந்ததருனம் அதாவது இந்த நிகழ்வு இடம்பெற்ற நிமிடம் அனைவரும் எழுந்து நின்று தங்களது உணர்வுகளை வெளிப்படித்தியிருந்தனர்.
மூன்றாவது நிகழ்வு,
"கற்பகத்தான்",  "எங்க ஊர் இலக்கணாவத்தை" இணைந்து தயாரிக்கப்பட்ட ஒளிச்சித்திரம் திரையிடப்பட்டது.
இந்த சித்திரத்தில் ஊரில் வாழ்ந்துகொண்டிருக்கும் பல உறவுகளின் ஆறுமுகம் ஜயா பற்றிய இரங்கல் செய்திகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இன்று இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் இதுவே அனைவரினதும் கவனத்தை மிகவும் ஈர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் தயாரிப்பிற்கும், வெற்றியிற்கும் மருமகன் குகரூபன், தம்பி சுதா பொன்றோர்களின் விடா முயற்சியே காரனமாகியிருந்துள்ளது.
இதில் அவர்கள் தங்களது தியாக மனப்பான்மையை நிறையவே வெளிப் படித்தியிருக்கின்றார்கள்.  
நான்காவது நிகழ்வு,
இரங்கல் உரைகள் இடம்பெற்றன, முறையே சிவராசன்னா, தேவியக்கா போன்ற உறவுகள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
அடுத்து தாயகத்தில் இருந்து சமாதான நீதிவான்(JP),  அகில இலங்கை குருபீடாதிபதி, அகில உலக சைவ குருமார் சம்மேளனம் தலைவர்,  வல்வை முத்துமாரியம்மன் பிரதம குருவாகிய  சிவசிறி சொமஸ்கந்த தண்டபாணிக தேசிகர் அவர்களால் "மறக்க மடியாத ஆறுமுகத்தின் நினைவுகள்" என்ற தலைப்பில் அனுப்பப்பட்ட இரங்கல் செய்தி லிங்கம் அவர்களின் குரலில் வழங்கப்பட்டது.
இதன்போது தண்டபாணி ஜயாவிற்கும் எங்கவூருக்குமுள்ள பிணைப்பை தெளிவுபடுத்தினார்.  2004 ல் இடம்பெற்ற கற்பகவிநாயர் ஆலய கும்பாபிஷேகத்தின்போது தண்டபாணி ஜயாவே தலைமை தாங்கி நடத்தியதையும் நினைவுபடுத்தினார்.
அடுத்து ஒரு கவிதை இடம்பெற்றது,  சகோதரி சித்தாரா மகேஸ் அவர்கள் தன்னை ஜயாவின் பேத்தி என்று உறுதிப்பட உரிமையில் தனது இரங்கல் செய்தியை கவி வடிவில் எழுதி அனுப்பியிருந்தார். 
இதற்கு செல்வி மிதுஷா சிற்றம்பலம் தனது இனிய குரலில் மறு உயிர் கொடுத்திருந்தார்.
கனடாவில் வாழும் உறவுகள் குரலாக இயங்கும் "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம்" சார்பாக மு.லிங்கம் அவர்களினால் வரையப்பட்ட இரங்கல் கவியிற்கு. நிர்வாகத்தின் செயலாளர் யோகு அவர்கள் குரல்வளம் கொடுத்திருந்தார்.
மருமகன் குகரூபன் அவர்களினால் அனுப்பப்பட்ட இரங்கல் கவியிற்கு மு.லிங்கம் அவர்கள் குரல் வழங்கியிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் அன்னாரின் இளைய மகன் அகிலன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
இதில் முக்கியமாக "கற்பகத்தான்" , " எங்க ஊர்  இலக்கணாவத்தை", போன்றோருக்கு பிரத்தியேகமான நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
இடம்பெற்ற நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய லிங்கம் அவர்கள் இந்த நிகழ்விற்கு அனைத்து தரப்பினராலும் கொடுக்கப்பட்ட முக்கியத்தையும், அதற்குரிய காரனங்களையும் ஒவ்வொரு நிகழ்வுகளின் இடையிலும் பட்டியலிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதன்போது "கற்பகத்தான்" , "எங்க ஊர் இலக்கணாவத்தை" போன்றவற்றின் செயல்பாட்டையும், அதன் தேவையையும் வற்புறுத்தினார்.
இதில் இயங்கும் இயக்குனர்களையும், நிர்வாகத்தினரையும் பாராட்டினார்.
நிகழ்வின் இறுதியில் மதியபோசனம் வழங்கப்பட்டது, அதன்போது உறவுகள் ஒருத்தருக்கொருவர் நலம் விசாரித்ததை அவதானிக்க முடிந்தது. 
கனடாவில் முக்கியமாக ரொரண்டோவில் எத்தனையோ லட்சம் தமிழர்கள் வாழும் சூழ்நிலையில், இடம்பெற்ற ஒரு முன்னுதாரனமான நினைவஞ்சலி நிகழ்வாகவே இதை பலராலும் நோக்கப்படுகின்றது.
இங்கு இடம்பெறும் இதைப்போன்ற நிகழ்வுகளிற்கு இது ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஜயப்பாடே இல்லை.

ஓம் சாந்தி!

சனி, 25 ஜூன், 2011

பண்பானவர்!

வணக்கம் உறவுகளே!

நிருபன் செல்வரட்ணம் என்ற பெயரையும், அவரின் முகத்தையும் முகநூலிலை தான் முதலில் பார்த்திருக்கிறேன்.

அதற்கப்புறம் தான் எங்கவூரவை நிகழ்வில் இடைக்கிடை தூரமாக அவரது முகத்தை அவதானிக்க ஆரம்பித்தேன்.
பார்த்தவுடனேயே எல்லோரையும் கவரக்கூடிய சாதுவான குணத்தை கொண்ட இளைஞர் என்பதை புரிந்துகொண்டேன்.

இப்படிப்பட்ட ஒருவருடன் நெருங்கிப்பழக எதிர்பாராத விதமாக எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவரது பிறந்த நாளான இன்று உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஆறுமுகம் இளையய்யாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதிற்காக மொன்றியால் சென்றபோது எதேச்சையாக நாங்கள் ஒரே வாகனத்தில் இணைந்து பயனிக்க வேண்டிய அந்த அரிய சந்தர்ப்பம் கிடைத்தது.

அன்று எங்களது பயணம் கிட்டத்தட்ட 10 மணித்தியாலங்களிற்கு மேல் இருந்திருக்கும்.   அன்றும் ஆரம்பத்தில் இவருடன் நான் அதிகமாக பேசவில்லை,   இருப்பினும் மற்றவர்களுடன் இவரது சம்பாஷனையை அவதானித்த வண்ணமே இருந்தேன்.

அப்போது திடீரென எனது கைத்தொலைபேசியில் பிறந்த நாளை நினைவு படுத்தும்(birthday alert) செய்தி வந்தது, உடனே அவரிடம் கேட்டேன் உங்க பெயர் என்னவென்று, அவர் தனது பெயரை சொன்னபோது தான் நான் எனது தொலைபேசி செய்தியை காட்டி உங்களது பிறந்த நாள் எனக்கு நினைவுபடுத்தி செய்தி வந்துள்ளது என்றேன்.

அதற்கப்புறம் தான் பேச ஆரம்பித்தோம்,  அவரது ஒவ்வொரு பேச்சிலும் மிகவும் தெளிவும்,  அறிவும்,  பணிவும் வெளிப்பட்டதை பார்த்து ஒருகணம் திகைத்துவிட்டேன்.

வாகனம் ஓய்வுக்காக நிற்பாட்டும்போது வாகனத்தில் வந்தவர்களை பராமரித்த விதமும், அவர்களுடன் பேசிய விதமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.   இந்த சிறுவயதிலை இப்டியான குணம் படைத்த ஒரு இளைஞனை நேரில் பார்த்த சந்தோசம் எனது நெடுந்தூரப்பயணம் இனிமையாக அமைய ஒரு காரனமாக இருந்தது.

இப்படிப்பட்ட அந்த பண்பான இளைஞன் எங்கவூர் உறவாக நினைத்துப்பார்க்கையில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இன்றைய நாளை பிறந்த நாளாகக்கொண்ட எனது உடன்பிறவா சகோதரன்
நிருபன் செல்வரட்ணம் சகலதும் பெற்று பல்லாண்டு காலம் நலமுடன் நீடூழி வாழ்கவென எல்லோர்க்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்....

வாழ்க, நீ நீடூழி வாழ்க!!!

நன்றி,
மு.லிங்கம்,
25. யூன். 2011.

வியாழன், 21 ஏப்ரல், 2011

மதிப்பிற்குரியவர்!!!

அனைத்து உள்ளங்களிற்கும் வணக்கம்,

நாம் வாழுகின்றபோதே மற்றவர்களினால் போற்றப்படனும், பாராட்டப்படனும் அப்போது தான் நாம் எங்களது வாழ்க்கையில் பூரனமடைகின்றோம் அதாவது வாழ்க்கையின் உச்சத்தில் நிற்கின்றோம் என்று பொருட்படும்.

இன்றைய எனது இந்த ஆக்கத்தில் அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த உள்ளத்தைப் பற்றி சில வரிகள் பதிய விரும்புகின்றேன்.

எங்களால் கந்தசாமி மாமா என்று அழைக்கப் பட்டுவரும் கந்தசாமி அவர்களை நான் அறிமுகப்படுத்தி தான் நீங்கள் அறிவேண்டிய அவசியமில்லை.
இவர் தனது இளமைப் பருவத்தின் போது அதாவது படிப்பு, தொழில் சம்பந்தமாக பெரும்பகுதியான காலங்களில் ஊருக்கு வெளியே போக்கியிருந்தாலும் ஊரில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள தவறுவதில்லை.   இவரது எண்ணங்கள், சிந்தனை, ஆதரவு, பற்று முழுக்க ஊர் சம்பந்தமாகவும், ஊர் மக்கள் சார்பாகவுமே இருந்துள்ளன என்பதை நான் அனுபவப்பட்டது மட்டுமன்றி இவரது படத்தை முகநூலில்(facebook) http://www.facebook.com/?ref=home#!/photo.php?fbid=1487627850306&set=o.333770126646&type=1&theater இணைத்தபோது உங்களிடம் இருந்து எனக்கு கிடைக்கப்பெற்ற தனி மடல்கள் மூலமாகவும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. 

தான்பாடு தன்பாடு என்று தனது வாழ்க்கையை போக்கிக் கொண்டிருக்கும் இவர் மீது எமதூர்மக்கள் அதாவது இலக்கணாவத்தை மக்கள் மட்டுமன்றி அயல் ஊரவர்களுமே பெருமதிப்பை பேணி வருகின்றனர்.

1970களிலை நாம் கொழும்பு செல்வதென்றால் இன்று வெளிநாடு செல்வதை விட பன்மடங்கு வியப்படைய வேண்டிய காலமாக இருந்தது.
அனேகமாக வெளிநாடு செல்லும் அலுவல்களாக தான் எங்க உறவுகள் கொழும்பு செல்வது வழமையாக இருந்தது.
அன்று கொழும்பு செல்லும் எங்கவூர் உறவுகளை வரவேற்கும் ஒருஉறவு இவர் மட்டும்தான் என்பதில் எந்தவிதமான ஜயப்பாடும் இல்லை.
கொழும்பு செல்லும் எங்கவூர் உறவுகளின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமன்றி அவர்களிற்கு இருப்பிட வசதி, உணவு உட்பட சகல ஏற்பாடுகளையும் தானே செய்து வழி அனுப்பி வைக்கும் ஒரு உயர்ந்த உள்ளம்.

2004ல் நான் தாயகம் சென்றபோது இவர்மீது எமது மக்கள் வைத்திருக்கும் பற்றையும், மதிப்பையும் நேரில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
அங்கு இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வின்போதும் இவரது வரவை ஒரு கெளரவமாகவே நினைத்துக் கொள்கின்றனர்.
இப்படியான உயர்ந்த உள்ளம் இன்னும் பல்லாண்டுகாலம் நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து எமது மக்களிற்கு பயன்படவேண்டுமென வாழத்துகின்றேன்.

நன்றி,
மு.லிங்கம்.
21-04-2011

திங்கள், 28 மார்ச், 2011

நான், எனது, எனக்கு!!!

அனைத்து உள்ளங்களிற்கும் முதற்கண் வணக்கம்!

இன்று சில விடயங்களை மனம்விட்டு உங்களுடன் பகிரலாம் என்ற நட்பாசையில் எனது நேரத்தை ஒதுக்கியுள்ளேன்.
நான், எனது, எனக்கு போன்ற வார்த்தைகளை உச்சரிப்பவனோ அல்லது எழுத்துக்களில் அதிகம் பயன் படுத்துகின்றவனோ தலைக்கனம் பிடித்தவன், சுய விளம்பரத்தை விரும்புகின்றவன் என்பதை பலரிடம் அனுபவ ரீதியாகவும், கேள்வியுற்றும் இருக்கின்றேன். இதுவரை காலமும் அந்த தவறுகளை இயன்றளவு தவிர்த்து வந்த நான் இன்று அந்த தவறிற்கு என்னையும் உட்படுத்தவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
அதாவது இன்று பகிரப்படவேண்டிய பல விடயங்களிற்கு அந்த அதாவது தவிர்க்கப் படவேண்டிய சொற்கள் பாவிக்கவேண்டிய அவசியமுள்ளது.

முதலில் மார்ச்26, சனிக்கிழமை எனது 25வது திருமண ஆண்டு நாளையிட்டு தனிமடலிலும், முகப்புத்தகத்திலும், தொலைபேசியிலும், நேரிலும் வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகளிற்கும், வாழ்த்த மறந்த, மற்றும் இவனை வாழ்த்தக்கூடாது என்ற நல்ல மனம் படைத்த உறவுகள் உட்பட அனைத்து உறவுகளிற்கும் எனது குடும்பத்தின் சார்பில் பலகோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மார்ச்25 அதாவது எனது திருமண நாளிற்கு முதல்நாள் கணினியை திறந்தபோது எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
எனது சகோதரன் (அல்லது அதற்குமேல் சொற்பதம் இருந்தால் அதையே பயன்படுத்தலாம் ) சுதா தில்லையம்பலம் அவர்கள் அணுகுண்டு மாதிரி ஒரு தகவலை பதிந்திருந்தார் http://www.facebook.com/?ref=home#!/topic.php?uid=333770126646&topic=16319  இதைப்பார்த்ததும் எனது உணர்வுகளை ஒருகணம் இழந்தேன் என்ன எழுதுவதென்றே தெரியல்லை ஆதலால் தலை மறைவாகிவிட்டேன் பல வாழ்த்துக்கள்http://www.facebook.com/?ref=home#!/permalink.php?story_fbid=1456866201284&id=1822231907 வந்து குவிந்தன எதற்கும் நன்றி சொல்லமுடியாத http://www.facebook.com/?ref=home#!/profile.php?id=1822231907  உணர்வில் அதாவது அதிர்ச்சியில் இருந்தேன்.

சுதாவை நான் நேரில் பார்த்த ஞாபகமே இல்லை நான் விரும்பியது சுதாவையல்ல அவரது முற்போக்குத் தனமான குணங்களும், சிந்தனைகளும் அவரது எழுத்தாற்றல்களையும் தான் முதலிலை காதலித்தேன்.
இதற்கு காரனம் எனது நோக்கமும், சிந்தனையும், கொள்கைகளும் அவரினதுடன் ஒத்தவையாகவே இருந்தன, எனது கனவுகளையும், நோக்கங்களையும் அவர்மூலம் நிறைவேற்ற முடியும் என்று இனங்கண்டுகொண்டேன்.
அதற்கப்புறம் தான் அவர் எனது நெருங்கிய உறவு என்பதை அறிந்துகொண்டேன் என்பது தான் உண்மை.

எமதூர் மக்களை இணைக்கவேண்டும், எல்லோர்கள் மத்தியிலும் ஏதாவதொரு வகையில் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற பலவிதமான வழிகளில் சிந்தித்தேன், முயற்சித்தேன் இறுதியாக கிடைத்தது தான் இந்த முகப்புத்தக குழுமம்.
இதை ஆரம்பித்தபோது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்தனே ஒழிய இவ்வளவு சீக்கிரத்திலை இப்படியான ஒரு பெரு வெற்றியளிக்கும் என்று எதிர் பார்த்திருக்கவில்லை.
இந்த வெற்றியிற்கு அனைத்து உறவுகளும் பங்காளியாகியுள்ளார்கள், அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்திலை நன்றிகள் தெரிவிக்க ஆசைப்படுகின்றேன்.

இந்த வருடம் எங்கள் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வுகளை புலம்பெயர்ந்த மக்களிற்கு தரிசனமாக கிடைக்க வழிசமைத்த அனைத்து உறவுகளிற்கும் கற்பக விநாகயகரின் அருள் நிச்சியம் கிடைக்கும்.
http://katpahaththaan.blogspot.com/  இந்த வேலைத்திட்டங்களில் பங்காற்றிய அனைத்து உறவுகளிற்கும் முக்கியமாக குகன்(அதாவது வதனியக்காவின் மகன்), சுதா, ரமணன், சிந்துஜன், பவதாரனி, தினுஷன்  உட்பட அனைவருக்கும் புலம்பெயர்ந்த இலக்கணாவத்தை மக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்கவூருக்கு பல நல்ல விடயங்களை செய்வதிற்கு "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" கிளையினர் தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளனர் என்பதை அண்மையில் கூட்டப்பட்ட நிர்வாக கூட்டத்தின் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.
இருப்பினும் தாயகத்திலை இருக்கின்ற எங்கவூர் உறவுகள் முக்கியமாக இளைஞர்கள் தங்களிற்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.
எங்களது பெற்றோர் காலத்தின்போது இடம்பெற்ற மாதிரி நான் பெரிசு நீ பெரிசு என்ற வேற்றுமைகளை களைந்து ஒருவர் செய்ய முற்படும் நல்ல விடயங்களிற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும்.
அதேபோல் முதியோர் தங்களது கவனங்களை ஆலயத்திலை மட்டும் செலுத்தாது இளைஞோர் எடுக்கும் ஊர் முன்னேற்ற விடயங்களிற்கு அதாவது வாசிகசாலை, பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக இப்படி பல திட்டங்களிற்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வரவேண்டும்.
அப்படி உங்களிற்குள் ஒரு ஒற்றுமை அல்லது கூட்டு ஏற்படும்போது தான் இங்குள்ள உறவுகளிற்கு ஒரு நம்பிக்கையும், ஊக்கமும் ஏற்படும். எங்களது செயல் திட்டங்களை இலகுவாகவும், விரைவாகவும் செய்ய ஏதுவாகவும் இருக்கும்.

சிந்தியுங்கள், செயல்படுங்கள், அனுப்புங்கள் உங்கள் திட்டங்களையும் அதன் தேவைகளையும் நிறைவேற்ற நாங்கள் முயற்சிக்கின்றோம்.

இணைவோம் உறவுகளாய், உறவுகளுக்காக1

நன்றி,
மு.லிங்கம்.


செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கற்பக விநாயகரின் 2011ம் ஆண்டு திருவிழாவும், புலம்பெயர்ந்த இலக்கணாவத்தை மக்களும்!!!

வணக்கம் உறவுகளே!
இலக்கணாவத்தை கற்பக விநாயகரின் திருவிழா ஆரம்பமாகி இன்று தேர்த்திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதுவரை காலமும் இடம்பெற்ற கற்பகத்தானின் திருவிழாவிற்கும் இந்த வருடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விழாவிற்கும் இடையே நிறையவே வித்தியாசங்கள் அதாவது சிறப்புக்கள் உள்ளன. 


 

இன்னும் சற்று விரிவாக   கூறுவதானால், உதாரனத்திற்கு  என்னை எடுத்துக்கொண்டால் நான் ஊரைவிட்டு புலபெயர்ந்த பெரும்பகுதியான காலங்களில் எங்கள் ஆலயத்திருவிழா இடம்பெற்று முடிந்த பலகாலங்களின் பின்பே திருவிழா நடந்ததாக அறிந்துகொள்வது வழமை.
ஆனால் இன்று அங்கு இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வும் நிமிடத்திற்கு நிமிடம் அறிந்து கொள்ளக்கூடிய வசதிகளை அங்குள்ள உறவுகள் சுதாவின் முயற்சியினால் செய்து தந்துள்ளார்கள்.

நான் "எங்க ஊர் இலக்கணாவத்தை" என்ற பெயரில் முகநூல்(Facebook) ஆரம்பித்தபோது இப்படித்தான் இடம் பெறவேண்டும் என்ற கனவு இருந்தது, எனது கனவிற்கும், கற்பனையிற்கும் செயலுரூபம் கொடுத்துக் கொண்டிருக்கும் தம்பி சுதாவுக்கும், அவருடன் இணைந்திருக்கும்  அனைத்து உறவுகளிற்கும் இந்தக்கணத்தில் பலகோடி நன்றிகள் கூற ஆசைப்படுகின்றேன்.


எங்கள் ஆலயத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விழா நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும், படங்களையும் இணைத்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் இதை ஒரு சம்பவமாகவும், செய்திகளாகவும் கவனித்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த உறவுகள் நாளடைவில் இதை ஒரு அற்புதமான தரிசனமாகவே உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதையும் அவர்களின் உணர்வுகளையும் தொலைபேசி மூலமாகவும், Email பரிமாற்ற மூலமும் என்னுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள்.
இதை அறிந்து கொள்ளும்போது எனது உணர்வுகளை அதாவது மகிழ்ச்சியை வார்த்தைகளிற்குள் உள்ளடக்க முடியாது.


இதைப்போன்ற இன்னும் பல செயல் திட்டங்களை பலரும் பயன்படக்கூடிய முறையில் நாங்கள் நிறைவேற்ற வேண்டும், இதற்காக நாங்கள் உறவுகளாய், கூட்டாக இணையவேண்டும்.
இதுவரை "எங்க ஊர் இலக்கணாவத்தை" என்ற முகநூல் குழுமத்தில் உறுப்பினராக இணையாதவர்கள் தயவுசெய்து இணைந்து கொள்ளுங்கள்.
வாருங்கள் இணைவோம் உறவுகளாய், உறவுகளுக்காக.

மு.லிங்கம்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மறக்க முடியாத 1970(எழுபதுகள்)!!!





இலக்கணாவத்தை கற்பகவிநாயகர்!


இலக்கணாவத்தை மக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வமும், இலக்கணாவத்தை ஊரின் அடையாளச் சின்னமும் கற்பக விநாயகர் தான் என்று கூறுவதில் எந்தவிதமான ஜயமுமில்லை.
1970 காலப் பகுதியிலை(ஆண்டு சரியாக ஞாபகமில்லை) திருடர்களின் கைவரிசையினால் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவத்தினால் ஆலயம் இடித்து கட்டவேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
இலக்கணாவத்தை மக்களின் கெட்ட காலமோ என்னவோ இந்த காலப்பகுதி முழுநாட்டு மக்களுமே பொருளாதார நெருக்கடியிலை மிகவும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதன் காரனமாக ஆலயத்தின் திருப்பணி வேலையும் ஜந்து, ஆறு ஆண்டுகள் என்று இழுத்தடித்துக் கொண்டே சென்றது, சுருக்கமாக சொல்லப் போனால் ஊர்மக்களிற்கு இதுவொரு வேதனைக்குரியதும், சோதனைக்குரியதுமான காலமுமாகவே இருந்தது.

இந்த நேரத்திலை தான் எதிர்பாராத விதமாக இரண்டு மூன்று சிறுவர்களாகிய நாங்கள், எங்கவூரிலை ஒரு கலைநிகழ்வு நடத்தவேண்டும் என்ற ஆசை கொண்டு(அதாவது பயமறியாத வயது) சிந்தித்து கலைவாணி விழா நடத்தும் திட்டத்தில் இறங்கினோம். இதற்கு முக்கிய காரனம் அயல் ஊர்களில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலைவிழாக்கள் போன்றன எங்களது மனதை அளவுக்கு அதிகமாக பாதித்திருந்தன.
சரி தீர்மானித்தாச்சு இதை எங்கிருந்து ஆரம்மிப்பது என்று தெரியாது திணறிக் கொண்டிருந்த நாங்கள், ஆலோசனை கேட்பதிற்காகவும், அனுமதி கேட்பதிற்காகவும் அன்றைய ஆலய நிர்வாகசபை முக்கிய உறுப்பினர்களான சாதிலிங்கம், நவரட்ணம் என்ற பெரியோர்களை நாடிச்சென்றோம்.
எங்களது ஆசைகளையும், திட்டத்தையும் கேட்டறிந்த அவர்கள் உடனையே அனுமதியை தந்ததுமட்டுமன்றி தங்களது பங்களிப்பு என்ன என்பதையும் தெரிவித்தார்கள் அதாவது இதைமாதிரி ஆலயத்தையும் கட்டி முடிப்பது பற்றியும் முயற்சி எடுங்கள் என்ற நிபந்தனையுடன் சம்மதித்தார்கள்.
அன்றைய தினமே கலைவாணி விழாவிற்கு நிதிசேகரிப்பதிற்காக ஒரு கொப்பியுடன் வீடு வீடாக உலாவர ஆரம்பித்தோம், அப்போது அதாவது ஆரம்பத்தில் எங்களில் பலர் நம்பிக்கை வைக்காத காரனத்தினால் ஆதரவைத் தவிர எதிர்ப்புக்களே அதிகமாக இருந்தன. இருந்தும் நாங்கள் விட்டபாடில்லை இதை அதாவது எதிர்ப்புக்களை முறியடிக்கும் நோக்கத்திலை எங்களை விட மூத்த இளைஞர்களை அணுகினோம்(அருட்செல்வம், புஸ்பநாதன், ராமஜெயம், தர்மராஜா,சேதுராகவன் போன்றோர் உட்பட) .
நாங்கள் அணுகின ஒவ்வாருத்தரும் ஒத்துழைப்புத்தர முன்வந்து தனித்தனியாக ஒவ்வொரு பொறுப்புக்களையும் (ஒலியமைப்பு, மேடை, ஒளி, கலை நிகழ்வுகள்)பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி இடம்பெறவிருந்த நாள் நெருங்க, நெருங்க பிரச்சினைகளும் வேறு வழிகளிலை பெருகிக்கொண்டே இருந்தன இருப்பினும் பொறுப்புக்கள் சிறுவர்களாகிய எங்கள் கரங்களில் இருந்து இளைஞோர் கைக்கு மாறியதால் எல்லாமே இலகுவாகவே முடிந்தன.
வடமராட்சிலையே இடம்பெறாதளவுக்கு அதிசிறந்த நிகழ்வாகவும், அதி சனத்திரள் கொண்ட தரமான கலைநிகழ்வாகவும் இந்த கலைவாணி விழா அமைந்திருந்தது.

கலைவாணி விழா முடிந்ததும் ஆலயம் கட்டும் விடயம் பற்றி அன்றிருந்த மூத்த சகோதரங்கள்(ராமஜெயம், அருந்தவரட்ணம், சண்முகரட்ணம், சிவராசா, யோகராசா,தங்கராசா,மகேந்திரம் போன்றோர் உட்பட)முயற்சியில் இறங்கி உடுப்பிட்டியூர் யோகன் என்ற எங்கவூர் உறவின் ஆலோசனைப்படி "அமுதும் தேனும்" என்ற பெயரிலை ஒரு நிதியுதவி கலைநிகழ்ச்சியை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி திறந்த வெளியரங்கிலை வெற்றியுடன் நடாத்தி முடித்து போதியளவு நிதியையும் சேர்க்க கூடியதாகவிருந்தது.
இந்த நிதியுடனும், எங்கவூர் மக்களின் பங்களிப்புடனும் ஆலயம் விரைவாக கட்டி முடிக்கப்பட்டு 1979லை கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டதாகும்.
முக்கிய குறிப்பு: காலப்பகுதிகள் தவறாக இருப்பின் சரியானவற்றை அறியத் தரவும்.
நன்றி,
மு.லிங்கம்.